இரு கைகள் இல்லை.. தன்னம்பிக்கை இருக்கு.. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி!
மயிலாடுதுறையில் ஆதரவற்ற காப்பகத்தில் பயின்று இரண்டு கைகள் இல்லாமல் தேர்வு எழுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி லட்சுமி, தான் ஒரு ஓவியராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் பொதுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி தொடங்கி இந்த 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 89 பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு கல்வி பயிலும் 5 ஆயிரத்து 42 மாணவர்களும் 5 ஆயிரத்து 353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 447 மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.
20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை எனவும், இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை வீதம் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரமும், உதவிக்காக தேர்வு எழுத ஆசிரியர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்வு எழுதும் மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாத வண்ணம் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை மயிலாடுதுறை எழுதினார். மாணவி லட்சுமி பிறந்த போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்துள்ளார். மேலும், அவர் பெண் குழந்தை என்பதால் அவருடைய பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறை அன்பகம் ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் மாணவி லட்சுமி பதினாறு நாள் குழந்தையாய் இருந்தபோது விட்டு சென்றுள்ளனர்.
அன்றில் இருந்து அன்பகம் காப்பகத்தில் வளர்ந்த லட்சுமி தான் படித்து பெரிய அளவில் சாதித்து சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என ஆர்வத்துடன் படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னம்பிக்கையுடன் படித்து தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுவை எழுதிய மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து அன்பகம் காப்பகத்தில் உள்ளவர்கள் மற்றும் இன்றி மாவட்டத்தில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமியிடம் பல திறமைகளும் ஒளிந்து கிடக்கின்றன. நடனமாடுதல், பாடுதல், மட்டுமின்றி கால்களால் தூரிகையை பிடித்து ஓவியங்களையும் தீட்டி வருகிறார். ஓவியத்தின் மீது மிகுந்த பற்று உள்ள மாணவி லட்சுமி தன் ஒரே ஓவியராக ஆக வேண்டும் என்றும் அதற்காக ஓவியம் சார்ந்த கல்லூரியில் சேர்ந்து உயர் படிப்பை படிக்க உள்ளதாக தனது ஆசையை தெரிவித்துள்ளார்.