நீட் தேர்வில் குளறுபடி; உச்ச நீதிமன்றம் என்டிஏவுக்கு நோட்டீஸ்! கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு
இத்தகைய சம்பவங்களால், நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்கு உள்ளாகி உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (ஜூன் 11) விசாரிக்கப்பட்டது.
அப்போது கூறிய நீதிபதிகள், இளநிலை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமைக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறி, இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கேள்விக்கு உள்ளான நீட் தேர்வின் புனிதத் தன்மை
முன்னதாக நீட் தேர்வை எழுதிய 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. எனினும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சம்பவங்களால், நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்கு உள்ளாகி உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கெனவே தேசியத் தேர்வுகள் முகமை இதுகுறித்து, குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தது.
பின்னணி என்ன?
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கியது, அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட 6 தேர்வர்கள், தேசிய அளவில் முதலிடம் பெற்றது, தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நீட் தேர்வு முடிவுகளில் எழுந்து வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நீட் குளறுபடி குறித்துக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்
இதற்கிடையே நீட் தேர்வில் குளறுபடியும் முறைகேடும் நடந்துள்ளதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இன்று (ஜூன் 11) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.