காலை உணவுத்திட்டத்துக்கு முதலமைச்சர் பெயர் சூட்டுங்க.. வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்
‘காலை உணவு’ திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த திட்டம் தெலங்கானாவிலும், கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், காலையில் உணவளிக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்
அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் காலை உணவளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ”முதல்வர் காலை உணவு திட்டம்” நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும், முதல்வர் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்தது.
‘காலை உணவு’ திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த திட்டம் தெலங்கானாவிலும், கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான "முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை" ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தி உள்ளார். இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.
தாயுமானவர் ஸ்டாலினை வணங்குகின்றோம்
22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் ஸ்டாலினை வணங்குகின்றோம். இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.
சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன். இந்த மகத்தான திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.