KVS Admission 2024: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?
KVS Admission 2024: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (ஏப்.1) தொடங்கி உள்ளது. 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கும் ஆஃப்லைன் முறையில் இன்று விண்ணப்பப் பதிவு ஆரம்பித்துள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
1254 பள்ளிகள்
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 25 பிராந்தியங்களில் 1,254 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 14 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 54 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
6 வயது கட்டாயம்
இதற்கிடையில், 2020 தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, 6 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி 1ஆம் வகுப்பில் சேர ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி அன்று 6 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
இன்று முதல் விண்ணப்பப் பதிவு
இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று (ஏப்ரல் 1ஆம் தேதி) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இவர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கும் ஆஃப்லைன் முறையில் இன்று (ஏப்ரல் 1ஆம் தேதி) விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கிறது. நேரடி முறையில் நடைபெறும் இந்த விண்ணப்பப் பதிவுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல பாலவாடிகா படிப்புகளுக்கும் இன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
முதல்கட்டப் பட்டியல் எப்போது?
மாணவர்களின் முதல்கட்டத் தற்காலிக பட்டியல் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும். அடுத்தடுத்த பட்டியல்கள் முறையே ஏப்.29 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இட ஒதுக்கீடு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
பெற்றோர்கள் https://kvsangathan.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், Click here to Register என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டியது முக்கியம்.
https://kvsonlineadmission.kvs.gov.in/register.html என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
எனினும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக சேர்க்கை குறித்த விதிமுறைகளை முழுமையாக அறிய: https://kvsonlineadmission.kvs.gov.in/instruction.html என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://kvsangathan.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.