Medical Colleges: கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரமா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி எனவும் ஆதார் மூலமான வருகைப் பதிவேட்டில் நடைமுறை சாத்தியமற்ற அம்சங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்க மறுத்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், அவற்றுக்கு ஓராண்டுக்கு மட்டும் இடைக்கால அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு மாற்றாக ஓராண்டுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது ஏன்? என்பதற்கான காரணத்தையும் மருத்துவ ஆணையம் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் உள்ள நிலையில், முழுமையான அங்கீகாரம் வழங்க மறுப்பது சமூக அநீதி ஆகும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து குறைகளையும் தமிழக அரசு சரி செய்து, அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிட வேண்டிய நிலையில், இப்போது வரை அக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரையில் எந்தக் குறையும் இல்லை. மாறாக, ஆதார் மூலமான கைரேகைப் பதிவு வருகைப் பதிவேட்டு முறையை செயல்படுத்துவதில்தான் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆதார் மூலமான கைரேகைப் பதிவு வருகைப் பதிவேட்டு முறையில், மருத்துவப் பேராசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு கூட வசதி இல்லை என்றும், நடைமுறை சாத்தியமற்ற அந்த முறையை செயல்படுத்தும்படி, எந்தவிதமான கலந்தாய்வும் நடத்தாமல் தன்னிச்சையாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்ததுதான் அனைத்துக்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குறை போக்கப்பட வேண்டும்.
முழுமையான அங்கீகாரம் வழங்குக
மருத்துவக் கல்லூரிகள் மாநிலத்திற்கு மிகவும் முக்கியமானவை. நடைமுறை சாத்தியமற்ற விதிகளை செயல்படுத்த கட்டாயப்படுத்தி, அதில் உள்ள குறைகளை பெரிதாக்கிக் காட்டி, அங்கீகாரத்தை ரத்து செய்வது நியாயமல்ல. ஆதார் மூலமான கைரேகைப் பதிவு வருகைப் பதிவேட்டு முறையை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்துடன் தேசிய மருத்துவ ஆணையம் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். அதன் பின்னர் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்படும் சிக்கல்களை களைய தமிழக அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.