ஜன.6 முதல் காலவரையறை அற்ற வேலைநிறுத்தம்; ஆசிரியர், அரசு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு
அரசு நிறைவேற்றாத பட்சத்தில், ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போட்டா ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

போட்டா ஜியோ எனப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதை அரசு நிறைவேற்றாத பட்சத்தில், ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போட்டா ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், தமிழ் மாநில அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.செ.கணேசன், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.வெங்கடாசலம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில ஆலோசக தலைவர் பெ.இளங்கோவன், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் இராதாகிருஷ்ணன், தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.கந்தசாமி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.சரவணன் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மேற்கண்ட சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை குறித்தும் தமிழக அரசின் காலதாமதம் பற்றியும் இரு அமர்வாக விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அனைவரின் ஒருமித்த கருத்தோடு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
17.11.2012-க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு TET தகுதி தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கோரி இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் 12527 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டுமாறும், தமிழ்நாடு முதலமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறைகளில் தனியார் மைய நியமனத்தினை முற்றிலும் கையிட வேண்டுமெனவும், சாலை பணியாளர்கள் 41 மாத காலத்தினை பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. இவை உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
டிசம்பர் 29 கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மேற்காணும் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட எதிர்வரும் 29.12.2025 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 5.45 மணிக்கு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மேலும் 06.01.2026 அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது எனவும், ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















