IIT Madras: ஏஐ ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாரான ஐஐடி சென்னை- என்ன தெரியுமா?
இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ ஐஐடி சென்னை முடிவு செய்துள்ளது.

ஐஐடி சென்னை, இந்தியாவின் அடிமட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவர்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையத்தை (AI Centre of Excellence) நிறுவ உள்ளது.
ஐஐடி சென்னை, இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்ஃபியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும்.
Kompact AI
ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை ஐஐடி மெட்ராஸ்-ல் இன்று (ஏப்ரல் 9, 2025) வெளியிட்டது. ‘Kompact AI’ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தளமாகும். இது எளிதில் கிடைக்காத, அதிக செலவு பிடிக்கும் GPU (Graphics Processing Units)-க்கு பதிலாக CPU-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.
Ziroh Labs ஏற்கனவே DeepSeek, Qwen, Llama உள்ளிட்ட 17 ஏஐ மாதிரிகளை CPU-களில் திறமையாக இயங்க மேம்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகளை ஐஐடி சென்னை ஏற்கனவே தரப்படுத்தியுள்ளது, செயல்திறன் அளவு, துல்லிய செயல்திறன் ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்கின்றன. முதன்முறையாக, உயர் செயல்திறன் கொண்ட ஏஐ CPU-க்களில் திறமையாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஏஐ மிகவும் அணுகக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.
இந்த நிகழ்வின்போது, ‘Kompact AI’ இன் தனித்துவமான திறன்களை ஜிரோ லேப்ஸ் குழுவினர் காட்சிப்படுத்தினர். அதுமட்டுமின்றி GPU-க்களைச் சார்ந்திருப்பதை நீக்குவதன் மூலம் CPU-க்களுக்கு மேல் ஏஐ வளர்ச்சியை எவ்வாறு மறுவரையறை செய்கிறது என்பதையும் இந்த நிகழ்வின்போது எடுத்துரைத்தனர்.
என்ன சிறப்பு?
இந்த ஏஐ தளம், உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்கள், கிளவுட் டேட்டா சென்டர்கள் மற்றும் எட்ஜ் சாதனங்களில் பொதுவாகக் காணப்படும் CPU-க்களைப் பயன்படுத்தி ஏஐ-ஐ உருவாக்குவதற்காக, பயிற்சி அளிக்கவும், ஊகிக்கவும் அனுமதித்து ஏஐ-ஐ அனைவரையும் சென்றடையும் வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. ‘Kompact AI’, உலகம் முழுவதும் எந்த தரவு தனியுரிமை மற்றும் தரவு விதிமுறைகளையும் மீறாமல் ஏஐ மேம்பாட்டை செயல்படுத்துகிறது.






















