IIT Madras : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்'! ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தும் இலவச ஆன்லைன் கோர்ஸ்..
சென்னை ஐ.ஐ.டி, கணிதம் மூலம் சிந்திக்கும் புதிய ஆன்லைன் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஜூலை 1 முதல் இந்த ஆன்லைன் வகுப்பு தொடங்குகிறது.
சென்னை ஐ.ஐ.டி, கணிதம் மூலம் சிந்திக்கும் புதிய ஆன்லைன் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஜூலை 1 முதல் இந்த ஆன்லைன் வகுப்பு தொடங்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் பாடத்திட்டம் உள்ளதால் இதற்கு 'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' (Out of the Box Thinking) என்று பெயரிடப்பட்டுள்ளது.
'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' என்றால் என்ன?
அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனை என்பது மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும். தெளிவான காரணங்கள் உடனடியாகத் தெரியாத நிலையில், பாரம்பரிய முறைப்படி தர்க்கரீதியாக அடுத்தடுத்த படிகளில் கிடைக்காத யோசனைகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. கணிதத்தின் கண்டறியப்பட்ட மற்றும் அறியப்படாத உண்மைகளை தர்க்கரீதியாகவும், விரிவாகவும் ஆர்வத்துடன் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய சிந்தனை வலியுறுத்தப்படுகிறது என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்தார்.
மொத்தம் 4 நிலைகள்:
பாடநெறி நான்கு தனித்தனியான நிலைகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இலவசமாகப் பதிவு செய்யலாம். மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் இரண்டு மணிநேர பாடங்கள் என பத்து வாரங்கள் ஆன்லைனில் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது அசைன்மெண்ட் வழங்கப்படும். அவர்கள் இறுதித் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களுடன் சான்றிதழ்களைப் பெறுவார்கள். முதல் இரண்டு நிலைகளில் ஒவ்வொன்றும் 20 மணிநேர பதிவு செய்யப்பட்ட வீடியோ அமர்வுகள் உள்ளன, நிலைகள் 3 மற்றும் 4 ஒவ்வொன்றும் 30 மணிநேர வீடியோ அமர்வுகளைக் கொண்டுள்ளன.
இந்த பாடமுறை, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கணித சிக்கல்களைத் தீர்க்கும் திறன் உண்டு என்ற நினைப்பைப் போக்கும் வகையில், இந்த பாடத்திட்டம் பல்வேறு விதமான அணுகுமுறைகளை முன்வைக்கிறது. புதிய நுட்பங்களை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாணியில் அறிமுகப்படுத்துவதுடன், நிஜவாழ்க்கையில் எந்த திட்டத்தையும் தன்னம்பிக்கையோடு எளிதில் எதிர்கொள்ள பயனர்களைத் தயார்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
பாடத்திட்டத்தின் முதலாவது பேட்ச் ஜூலை 1, 2022 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம்.
ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், ஐஐடி மெட்ராஸ்-ன் செக்.8 கம்பெனி (IITMadras Pravartak Technologies Foundation, sec 8 company of IIT Madras) மூலம் கட்டணமின்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.