(Source: ECI/ABP News/ABP Majha)
Group 2 2A Mains Exam: அதிரடி.. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு; தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி...
குரூப்- 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.
குரூப்- 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.
022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் நவம்பர் 8ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மெயின் தேர்வுகள் எனப்படும் முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், குரூப்- 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்- 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ- சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் இ- சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.