RTE students: இந்த மாணவர்களுக்கு அரசேதான் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் கல்விக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
2011 முதல் தமிழகத்தில்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது.
எனினும் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசு செலுத்துவதில்லை. இதை அரசேதான் செலுத்த வேண்டும் என்று ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவனைச் சேர்த்த வேலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்ந்த தந்தைக்கு சீருடை மற்றும் பாடநூல் கட்டணமாக ரூ.11,977 அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.