NEET-UG: பயாலஜி படிக்காமலேயே மருத்துவர் ஆகலாம்; தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி- முழு விவரம்
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம். எனினும் சம்பந்தப்பட்டமாணவர்கள் உயிரியல்/உயிர் தொழில்நுட்ப தேர்வில் தகுதி பெற வேண்டும்.
10+2 கல்வி முறையில், பயாலஜி எனப்படும் உயிரியல் பாடத்தைப் படிக்காமலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம். இதற்கான புதிய விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம். எனினும் சம்பந்தப்பட்டமாணவர்கள் உயிரியல்/உயிர் தொழில்நுட்ப தேர்வில் தகுதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கொண்டு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நீட் இளங்கலைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். இதன்மூலம் அவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முடியும்.
வெளிநாடுகளிலும் சேர்ந்து படிக்கலாம்
அதுமட்டும் அல்லாது, வெளிநாடுகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளைப் படிப்பதற்கான தகுதிச் சான்றிதழை தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து பெறவும் அவர்கள் தகுதியானவர்கள்.
முன்னதாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் செய்முறைத் தேர்வுகளோடு, இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்து, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பைப் படிக்கத் தகுதியானவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு வருட படிப்பையும் ரெகுலர் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டும். திறந்தநிலை பள்ளி அல்லது தனித் தேர்வராக இருக்கக் கூடாது என்று விதிமுறை இருந்தது.
இந்த விதிமுறையைத் தற்போடு தேசிய மருத்துவ ஆணையம் தளர்த்தி உள்ளது. இதன்மூலம் 11, 12ஆம் வகுப்புகளில் உயிரியல் / உயிரி தொழில்நுட்பவியல் படிக்காமலேயே ஒருவரால், மருத்துவர் ஆக முடியும்.
உயிரியலுக்கு முக்கியத்துவம்
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றம்
இதுகுறித்து முன்னதாக ஜூன் 14ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து தகுதி மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.nmc.org.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.