Free Breakfast Scheme: யாருக்கெல்லாம் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி; என்னென்ன உணவுகள்?- முழு விவரம்
காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை, ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.15) தொடங்கி வைக்க உள்ளார். மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள சமையல் அறைகள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள்
* திங்கட்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* செவ்வாய்க்கிழமை - கிச்சடி வகை ( ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி)
* புதன்கிழமை - பொங்கல் (வெண் பொங்கல், ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார்)
* வியாழக்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* வெள்ளிக்கிழமை - கிச்சடி வகை (ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி) உடன் ரவா கேசரி, சேமியா கேசரி
என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?
* சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம்.
* காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும்.
* மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும்.
* காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது, உணவு பரிமாறுவதற்கு எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதவி செய்யலாம்.
* சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
* எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் இந்த பணியை சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும்.
யாருக்கெல்லாம் சிற்றுண்டி?
முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
மேலும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி என வழங்கப்பட உள்ளது.