Education Budget Highlights: மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக் கடன், இவர்களுக்கு ஒரு மாத ஊதியம்- பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மோடி அரசாங்கத்தின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட் இதுவாகும். மேலும் மோடி 3.0 அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:
* இந்த நிலையில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இந்தாண்டு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.
* நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.
* 20 லட்சம் இளைஞர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் மற்றும் 1,000 தொழில் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளது.
அரசே வழங்கும் ஒரு மாத ஊதியம்
* இளைஞர்களின் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.