School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.28) விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் ’’மோன்தா’’ என்னும் புயல் உருவாகி உள்ளது. சென்னைக்குக் கிழக்கே 480 கி.மீ. தூரத்தில் இந்தப் புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்டோபர் 28) மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா- மசிலிப்பட்டினம் இடையே, மோன்தா புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றில் இருந்து 3 நாட்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் காரணமாக இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.28) விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை
அதே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.27) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, கோனசீமா மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதி மாணவர்கள், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
ஒடிசா பள்ளிகள் மூடல்
அதேபோல ஒடிசாவின் எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு உள்ளன. குறிப்பாக, மல்கங்கிரி, கோராபுட், ராயகடா, கஞ்சம், கஜபதி, கந்தமால், கலஹண்டி மற்றும் நபரங்பூர் ஆகியவை இன்று தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் எப்படி?
தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கும் புயலுக்காக இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. எனினும் சிவகங்கை மாவட்டத்தின் 7 ஒன்றியங்களில் அக்.27 மற்றும் 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எதற்காக? 27-ல் மருது பாண்டியர் நினைவேந்தல், 30-ல் தேவர் ஜெயந்திக்காக சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையர்கோவில், இளையான்குடி ஒன்றியங்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.






















