மத்திய ஆயுதப்படை காவலில் வேலை; ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இவங்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய ஆயுதப்படை காவலில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய ஆயுதப்படைக் காவலில் காலியாக உள்ள பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுதப்படை காவல் அதாவது சி.ஆர்.பி.எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுவாக சி.ஆர்.பி.எஃப். என்பது மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாக செயல்பட்டுவருகிறது. இந்த மத்திய ஆயுதப்படை காவல் வீரர்கள், ஏதாவது பிரச்சனையின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தல், இராணுவ அல்லது கலக தாக்குதலுக்குப் பதிலடி அளித்தல், இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல், பிரச்சனைக்குரியப் பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்தத் தேர்தல் பாதுகாப்பு வழங்குதல், முக்கிய நபர்களுக்குப் பாதுகாப்பளித்தல் மற்றும் இயற்கைப்பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில்தான், இத்தகைய மத்திய ஆயுதப்படை காவலில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் படை வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் படை வீரர்கள் மத்திய ஆயுதப்படை காவலராகப் பணிபுரிவதற்கு அரிய வாய்ப்பு உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளார். அதில் மத்திய ஆயுத காவல் படை, தேசிய புலனாய்வு பிரிவு, சிறப்பு அதிரடி படை , அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்பணிக்கு சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள் நேரடியாக https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்படி இணையதள மூலம் விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்பணிகளில் சேருவதற்கு முன்னாள் படை வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே மத்திய ஆயுதப்படை காவல் பணிக்கு விண்ணப்பித்த முன்னாள் படை வீரர்கள் இதுக்குறித்த விபரங்களை திண்டுக்கல் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.