1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: தேசிய கல்விக் கொள்கை அமலா? ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரான நடவடிக்கையாக 1 முதல் 8 வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே தேர்வு என்ற நடைமுறை உள்ளது.
![1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: தேசிய கல்விக் கொள்கை அமலா? ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி Common Question Paper for Class 1 to 8 Students: National Education Policy Implemented? Aramba Palli Asiriyar Kootani Questions 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: தேசிய கல்விக் கொள்கை அமலா? ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/ed20f37e6a95cfbd8a8897ffa729f7961702293516628332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2023- 2024ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வில் மாநில அளவில் பொது வினாத்தாளைப் பின்பற்றி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை மாற்றி முன்பு போல் பள்ளிகள் அளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
’’தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோரின் உத்தரவில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15.12.2023 முதல் நடத்திடவும், 4, 5ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 12.12.2023 முதல் நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்விற்கான வினாத்தாட்கள் https://exam.tnschools.gov.in என்ற இணைய முகவரியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் அறிக்கைப்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கும் மாநில் அளவில் பொது வினாத்தாளைப் பின்பற்றி தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
வினாத்தாட்களை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்விற்கு முதல் நாள் பதிவிறக்கம் செய்து, அவற்றை மாணவர்களின் நான்கு வகையான கற்றல் நிலைகளுக்கு ஏற்ப போதிய அளவில் நகலெடுத்து, மிகவும் பாதுகாப்பாக, இரும்பு அலமாரியில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் ஒரே தேர்வு
மேற்கண்டவாறான நடைமுறைகள் என்பது 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளுக்கான நடைமுறை போன்று உள்ளது. “தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ ஏற்க மாட்டோம்” என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க தனியாகக் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரான நடவடிக்கையாக 1 முதல் 8 வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே தேர்வு என்ற நடைமுறை உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020ல் 3, 5, 8 ஆகிய வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 3, 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்பது இளம் சிறார்களின் நெஞ்சங்களில் தேர்வு பயத்தையும், உளவியல் ரீதியாகக் குழந்தைகளின் மனநிலையைப் பாதிப்பதாகவும், குழந்தைகளின் இடைநிற்றலை அதிகரிக்கும் செயலாகவும் அமையும் என்பதால் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை அமலா?
இப்படிப்பட்ட சூழலில் தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 8 வகுப்புக்களுக்கு மாநில அளவில் ஒரே தேர்வை நடத்துவது என்பது முரண்பாடாக உள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கை - 2020ன் கூறுகளை தமிழ்நாட்டில் வேகமாக அமல்படுத்துவதாகவும் உள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏதோ நீட், ஸ்லெட், நெட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை நடத்துவதைப் போல விதிமுறைகளை அறிவிப்பது என்பது எவ்விதத்திலும் பொருத்தமானதாக இல்லை. உலகில் கல்வியில் முன்னேறிய எந்தவொரு நாட்டிலும் 1 முதல் 8 வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அல்லது மாநில அளவிலான தேர்வு என்ற நடைமுறை இல்லை.
கல்வி என்பது குழந்தைகள் சுதந்திரமாகக் கற்பதையும், சுதந்திரமாகச் சிந்திப்பதையும் உறுதிப்படுத்துவதோடு, குழந்தையை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தேர்வை மையப்படுத்தி குழந்தைகளின் கல்வி அமையக்கூடாது என்பதை கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, 2023-2024 ஆம் கல்வியாண்டில் இரண்டாம் பருவத்தேர்வில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு மாநில அளவில் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்திடவும், கடந்த காலங்களில் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டவாறு 1 முதல் 8 வகுப்புக்களுக்கு பள்ளிகள் அளவில் ஆசிரியா்களே வினாத்தாட்களைத் தயாரித்து தேர்வு எழுதும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)