Medical College Committees: இனி மருத்துவக் கல்லூரிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க குழுக்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி
மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் பாலியல் புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் பாலியல் புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத்தின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஸ்ரீநிதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட இடங்களில் குழுக்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதத்தில் உத்தரவிட்டது. குறிப்பாக பாலியல் குற்றத் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட POSH சட்டத்தின்படி உள்ளகப் புகார் குழு, பணியிட புகார் குழு, துணை நிலை குழுக்களை (Internal Complaints Committees, Local Committees, Internal Committees) அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் மருத்துவக் கல்லூரிகளும் பணியிடங்களில், மேலே குறிப்பிட்ட குழுக்களை அமைக்க வேண்டும். பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட POSH சட்டத்தின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல சம்பந்தப்பட்ட குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களின் கைப்பேசி எண்கள், இ- மெயில் முகவரிகளை இணைய தளத்திலும், மற்ற அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் ஆன்லைனில் புகார்கள் வந்தால், தேவையான, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். POSH சட்ட விதிகளின்படி அந்தக் குழுக்கள் செயல்பட வேண்டும். இந்த உத்தரவு தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது’’.
இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ ஆணையத்தின் உத்ததரவை விரிவாகக் காண https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/PoSH%20Public%20Notice.pdf என்ற முகவரியை க்ளிக் செய்யவும்.