பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்கள், இளைஞர்கள் போராட்ட தடை உத்தரவு சர்ச்சை: பின்வாங்கிய தமிழக அரசு- நடந்தது என்ன?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரிக் கல்வித் துறை, கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து கல்லூரிக் கல்வி ஆணையர் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
போராட்டங்களில் பங்கேற்கத் தடை
அதில், ’’இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் கூட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து ஒடுக்குவதா? என்று TVK அரசுக்கு SFI கண்டனம் தெரிவித்தது.
SFI கண்டனம்
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ’’இளைஞர்களின் அரசியல் பங்கேற்பையும் புதிய தலைமுறையின் குரலையும் முன்னிறுத்தி அரசியலுக்கு வந்ததாகக் கூறிக்கொள்ளும் TVK அரசு, இன்று ஆட்சியில் தனது நிர்வாகத்தின் மூலம் மாணவர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணிக்க அனுமதிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது போராட்ட உரிமை குறித்து பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களின் போராட்ட உரிமையை கட்டுப்படுத்துவது இரட்டை நிலைப்பாடு அல்லவா?
அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் உரிமை, அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களின் கருத்தைக் கேட்பது அல்ல; ஆட்சியில் இருக்கும் அரசை தொடர்ந்து கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யவும் மக்களுக்கு உரிமை இருப்பதுதான் ஜனநாயகம்.
மாணவர்கள் அரசின் கண்காணிப்புப் பொருட்கள் அல்ல; ஜனநாயகத்தின் செயல்படும் குடிமக்கள். மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளை கண்காணித்து அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். மாணவர்களின் குரலை ஒடுக்காமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.
நாளை போராட்டம் அறிவிப்பு
எனவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணித்து தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த உத்தரவு எந்த அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதையும் முதலமைச்சரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பொதுவெளியில் விளக்க வேண்டும். மாணவர்களின் அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது நிலைப்பாட்டை TVK அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி நாளை (20/08/2026) தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் போராட்டம் நடத்தவும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு அழைப்பு விடுத்து இருந்தது
இந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக கல்லூரிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















