MBBS in Hindi: உ.பி.யிலும் இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் விரைவில் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் விரைவில் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 232 நாட்களில் 97 நிபுணர்கள் இணைந்து, ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மருத்துவப் பாடங்களை மொழிபெயர்த்துள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அக்டோபர் 16ஆம் தேதி அன்று வெளிட்டார். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டது.
இதையடுத்து, மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக்குழு, இதுகுறித்த பேச்சுவார்த்தையை தேசிய மருத்துவ ஆணையத்துடன் நடத்தி வருகிறது. அத்துடன் மாநில மருத்துவ ஆணையம், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மாநில மொழிகளில் மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி கூறியபோது, ’’தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ளார்.
மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே மருத்துவப் பாடத்தைக் கற்பிக்கும் பணியுடன், இந்தி அல்லது பிராந்திய மொழிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பாடங்கள் கற்பிக்கப்படும். இவ்வாறு செய்வதற்கு 90 சதவீத நோயாளிகளுக்கு ஆங்கிலம் தெரியாததுதான் முக்கியக் காரணம்.
அதேபோல பெரும்பாலான மாணவர்கள் தங்களின் தாய்மொழிகளில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதால், கற்கத் திணறுகின்றனர்.
கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊர்களிலோ, கிராமங்களிலோ பணியாற்ற விரும்புகின்றனர். தாய்மொழி மூலம் மருத்துவக் கல்வியை அளிப்பதன்மூலம் கிராமங்களில் மருத்துவ வசதிகளை வழங்க முடியும். எனினும் இதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் பாதிக்கப்படாது’’ என்று சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் விரைவில் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Scholarship Scheme: மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?- விவரம்