''முதல்வருக்கு பாராட்டு மாநாடு தேவையில்லை; அரசு ஊழியர் முதல் கோரிக்கையே முழுசா நிறைவேத்தலை''- வெளியான பரபரப்பு அறிக்கை!
இந்த சூழ்நிலையில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அல்லது பாராட்டோ, மாநாடோ நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை- தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.

அரசு ஊழியர்களின் பத்து அம்ச கோரிக்கைகளில் முதல் கோரிக்கை கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அரைகுறையாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதால் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அல்லது பாராட்டோ, மாநாடோ நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்று தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் நிர்வாகிகள் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
’’நமது சங்கம் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் மிக முக்கியமான 10 அம்ச கோரிக்கைகளை வடிவமைத்து அவற்றை உடபடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் 2026 ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் ஜாக்டோ ஜியோவுடன் அமைச்சர்கள் மூவர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக 02.01.2026 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ’’உங்களுடைய 10 அம்ச கோரிக்கைகள் தொடர்பான நல்ல அறிவிப்பை முதல்வர் 03.01.2026 அன்று அறியிப்பார்கள்’’ என்று கூறினார்கள்.
முதல் கோரிக்கையே நிறைவேற்றவில்லை
அமைச்சர்கள் கூறியபடியே முதல்வர் 02.012026 அன்று அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பத்து அம்ச கோரிக்கைகளில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அப்படியே முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கை. அந்த முதல் கோரிக்கை தொடர்பாகத்தான் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அந்த அறிவிப்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பாக இல்லை. பழையபடி இறுதியாக பெறும் ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்குவோம்.
அதே நேரத்தில் மாதா மாதம் ஊதியத்தில் 10%ஐ ஓய்வு பெறும் வரை பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மட்டுமே வெளியிட்டார். மற்ற கோரிக்கைகள் எதையும் ஏற்று அறிவிப்பை வெளியிடவில்லை.
எதற்காக நன்றி தெரிவித்தோம்?
முதல் கோரிக்கையை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, அதுவும் பங்களிப்பு ஓய்வூதியமாகவே காட்சி தருகிறது, இருப்பினும் 50% ஓய்வூதியம் அறிவுத்துள்ளாரே என்ற ஒரே காரணத்திற்காக 01.01.2006 அன்று அறிவிப்பு வெளியான அடுத்த வினாடியே முதல்வரை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அதற்கான நன்றிகளை தெரிவித்து விட்டோம். அந்த நிகழ்வும் தமிழகம் முழுவதும் அனைத்து மீடியாக்களிலும் வெளியிடப்பட்டன.
முதல்வரும் ஜாக்டோ ஜியோவினர் என்னை சந்தித்து நன்றிகளை கூறினார்கள் என்று 23.01.2026 அன்று சட்ட சபையிலும் தெரிவித்துள்ளார். அதுவும் தமிழகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறது.
முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அல்லது பாராட்டு மாநாடு இப்போதைக்கு தேவையில்லை
நமது பத்து அம்ச கோரிக்கைகளில் முதல் கோரிக்கை கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அரைகுறையாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொடுத்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படியே வாக்குறுதியாகயே இன்றும் நீடிக்கின்றன.
ஆகவே இந்த சூழ்நிலையில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அல்லது பாராட்டோ, மாநாடோ நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வூதியம் வழங்குவதற்கு ஊதியத்தில் 10% மாதா மாதம் பிடித்தம் செய்வதை உடனடியாக முதல்வர் கைவிட வேண்டும். மற்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும் அதன் பிறகு முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி அறிவிப்பு மாநாடும் பாராட்டு விழாவையும் மிகவும் வெற்றிகரமாகவும், கோலாகலமாகவும் நடத்திக் காட்டுவோம்’’ என்று தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
























