![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Girl Child Protection : முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்; ரூ.50 ஆயிரம் பெறலாம்.. எப்படி?
CM Girl Child Protection Scheme in Tamil: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, ரூ.50 ஆயிரம் முதிர்வுத் தொகையைப் பெறாதவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
![CM Girl Child Protection : முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்; ரூ.50 ஆயிரம் பெறலாம்.. எப்படி? CM Girl Child Protection Scheme in Tamil How to Get Rs 50000 Chief Minister Girl Child Protection Scheme Details Inside CM Girl Child Protection : முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்; ரூ.50 ஆயிரம் பெறலாம்.. எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/7d5d9e5ea244ae54a16da065832328fd1690807924773332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, ரூ.50 ஆயிரம் முதிர்வுத் தொகையைப் பெறாமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9,00,056 பெண் குழந்தைகள் பயன்பெற பதிவு செய்து உள்ளனர். வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்கள் இரு பெண் குழந்தைகளுடன் மட்டும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும்போது, அவை இத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ50,000/-க்கான நிலை வைப்புத்தொகை, இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25,000/-க்கான நிலை வைப்புத்தொகையும், பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்பட்டு முதலீட்டு பத்திரங்களின் நகல் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத்தம் 3-பெண் குழந்தைகள் இருப்பின் சிறப்பு அனுமதி பேரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ25,000/-வீதம் பெற்று பயனடையலாம். பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு எழுதி, 18-வயது வரை குழந்தை திருமணம் புரியாமல், இருக்கும் போது அவர்களுக்கு திரண்ட வட்டியுடன் கூடிய வைப்புத்தொகை, முதிர்வுத் தொகையாக வழங்கப்படுகிறது.
என்ன தகுதி?
* பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.
* இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும்.
* இணையதளத்தின் வாயிலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்த 1,40,003 பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிறுவனம் மூலம் ரூ 350.28 கோடி முதிர்வுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத்தொகை பெற பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
மாதாமாதம் இரண்டாம் செவ்வாய்க் கிழமையில் முகாம்கள்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து மாவட்ட சமூக நல அலுவலகங்களிலும் பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம் முகாம்களில் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், வைப்புத்தொகை இரசீதுகளில் பெயர்/ பிறந்த தேதி மாற்றம் வேண்டுவோர், வைப்புத் தொகை இரசீது நகல் பெற விரும்புவோர் மற்றும் 18 வயது நிறம்பிய பெண் குழந்தைகள் முதிர்வுத்தொகைக்காக விண்ணப்பிப்போர், ஆகியோர் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
எனவே முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய தகுதியான குழந்தைகள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் தங்கள் பெயரில் துவங்கிய புதிய வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் தாங்கள் முன்பு விண்ணப்பித்த மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, முதிர்வுத் தொகை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)