Chennai Rains: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?- துணை முதல்வர் உதயநிதி பதில்
மழை எச்சரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து, இன்று மாலைக்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்- உதயநிதி ஸ்டாலின்
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன மழைப் பொழிவு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அரை நாள் பள்ளி செயல்படுகிறது. வட கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியானது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை
இந்த நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழையும் சில இடங்கைல் அதி கன மழையும் பெய்யலாம் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்
இதனால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அரசுத் தரப்பில் இதுகுறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்துத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ’’பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். மழை எச்சரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து, இன்று மாலைக்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் நேரில் ஆய்வு
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி, சென்னை சுற்றுப் பகுதிகள், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜி.பி.சாலை மற்றும் மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து கேட்டறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.