Cheyyur Government College: 25 ஆண்டு கால ஏக்கம்.. செய்யூர் அரசு கல்லூரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு.. மகிழ்ச்சியில் மாணவர்கள்
Cheyyur Government arts and science College: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கல்லூரிக்கு, 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அரசு கலைக்கல்லூரி அமைய வேண்டும் என 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கலைக் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
செய்யூர் அரசு கல்லூரி - Cheyyur Government arts and science College
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். செய்யூர் தாலுகாவில் 84 ஊராட்சிகள் உள்ளன. செய்யூர் தாலுகாவில் கல்லூரிகள் இல்லாததால் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மமாணவியர்கள், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் வரையில் நீண்ட பயணம் மேற்கொண்டு கல்லூரிகளுக்கு சென்று நிலை இருந்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 30 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து, தங்களது கல்லூரி படிப்பை படித்து வருகின்றனர். இந்தநிலையில் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி இருப்பது, அப்பகுதி மக்களிடையே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் பகுதியில், அரசு கலைக் கல்லூரி செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது பொதுமக்கள் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கான பணிகளில் அரசு இறங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது.
ஒதுக்கப்பட்ட இடங்கள்
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கல்லூரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம், பிபிஏ, பிஏ பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பிஏ வரலாறு ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெற உள்ளன.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பி.ஏ வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தலா ஐம்பது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிகாம் மற்றும் பிபிஏ ஆகிய படிப்புகளுக்கு தலா 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செய்யூர் மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் கல்லூரி, தற்காலிக இடத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















