New MBBS PG Seats: மருத்துவக் கல்வித் துறையில் மாபெரும் மாற்றம்! 10,000+ மருத்துவ இடங்களை அதிகரிக்கும் மத்திய அரசு!
இதன்படி, 5000 முதுகலை மற்றும் 5023 இளங்கலை மருத்துவ இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நாட்டின் மருத்துவக் கல்வித் திறனை கணிசமாக அதிகரிக்கும் வகையில் ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 5000 முதுகலை மற்றும் 5023 இளங்கலை மருத்துவ இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
10,023 புதிய மருத்துவ இடங்கள்
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் (CSS) மூன்றாம் கட்டத்தின் கீழ், தற்போதுள்ள மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள்/ தனிப்பட்ட முதுகலை நிறுவனங்கள்/ அரசு மருத்துவமனைகளில் 5,000 முதுகலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், 5,023 இளங்கலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு இடத்துக்கு ரூ.1.50 கோடி என்ற செலவு உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது, இளங்கலை மருத்துவத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் முதுகலை இடங்களை உருவாக்குவதன் மூலம் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், அரசு மருத்துவ நிறுவனங்களில் புதிய சிறப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்த உதவும். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை வலுப்படுத்தப்படும்.
15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2025-26 முதல் 2028-29 வரையிலான காலத்திற்கான மொத்த நிதியாக ரூ.15,034.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.10,303.20 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.4,731.30 கோடி ஆகும்.
என்ன பலன்கள்?
- மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை குறைக்கப்படும், குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் தரமான சுகாதார சேவை மேம்படும்.
- தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை திறம்பட விரிவாக்க முடியும்.
- நாட்டின் ஒட்டுமொத்த சமூக- பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
- மருத்துவத் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- இந்தியா மருத்துவக் கல்வி மற்றும் மலிவு சுகாதார சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய இடமாக மாறும்.
இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















