சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி : ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.எ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும், அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆகஸ்ட் 27 கடைசி
- விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.08.2024 முதல் 27.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாகப் பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 27.08.2024 மாலை 05.30 மணி வரை.
- விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும்தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: "செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106.
நீட் கட்டாயம்
- தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) - 2024-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.
- விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
- கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
- கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.
- கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் எற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும், தபால் / கூரியர்சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.