(Source: ECI/ABP News/ABP Majha)
TN School Exam: அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்.26 முதல் மதிப்பீட்டுத் தேர்வு- முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் பிப்.26 முதல் நடைபெற உள்ளன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் பிப்.26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் எஸ்சிஇஆர்டி இயக்குநர் ஆகிய இருவரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக “மாநில மதிப்பீட்டுப் புலம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 26.02.2024 முதல் 29.02.2024 வரை படிப்படியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்த வேண்டும்.
இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும்இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
வினாத்தாள்களைப் பதிவிறக்கும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப்பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
வினாத்தாள் அச்சடிப்பு
தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப் பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு (Competency Based Test) தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.
ஓவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில், குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும்.
இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எவ்விதக் குறுக்கீடும் கூடாது
எவ்விதக் குறுக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத் தெரிவுகளை மேற்கொள்வதைத் தலைமையாசிரியர்களும்வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.
தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.