Mobile Phones Ban: ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை: மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு
மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் மாநில கல்வித்துறை அமைச்சர் போச்சா சத்ய நாராயணா உயர் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். அதில், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் மொபைல் போன் பயன்பாட்டின் தாக்கம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செல்போன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு யுனெஸ்கோ 2023 ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்டது.
’பள்ளி வகுப்பறைக்குள் செல்லும் முன், ஆசிரியர்கள் அனைவரும் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது தலைமை ஆசிரியரால் நியமிக்கப்படும் ஆசிரியர்களிடம் தர வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ’மொபைல் போன் தடையை அமல்படுத்துவதில் தலைமை ஆசிரியர் கண்டிப்பாக செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளும் உத்தரவுகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக மாவட்டக் கல்வி அலுவலர் ரேணுகா தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ அறிக்கை சொன்னது என்ன?
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை (Global Education Monitoring Report 2023) வெளியிடப்பட்டது.
அதில், ‘Technology in Education: A Tool on Whose Terms’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கற்றல் திறனை மேம்படுத்தும்
பள்ளிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்படுவது பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்தும். குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனிதர்கள் மீது ஆளுமை செலுத்தக்கூடாது. இதில் மானுடர்களை மையப்படுத்திய பார்வை வேண்டும் என்று யுனெஸ்கோ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி