Saturday Schools Working: தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்க வேண்டும்; அரசு உத்தரவுக்கு என்ன காரணம்?
தமிழகம் முழுவதும் நாளை தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் இயங்க வேண்டும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் இயங்க வேண்டும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராசர் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பள்ளிகள் முழு நாள் இயங்க உள்ளன.
ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான காமராசர் ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவரின் பிறந்தநாள் தமிழக அரசால், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக நாளை (ஜூலை 15) தமிழகம் முழுவதும் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில், ஜூலை 15-ம் தேதியன்று அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராசர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும். இதுகுறித்து அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நடப்புக் கல்வியாண்டில் வரும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல காமராசரின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டி , ஓவியப் போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் காமராசர் படத்தை அலங்கரித்து வைத்து, கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று காமராசர் செய்த முதல் வேலை குலக்கல்வியை நிறுத்தியதுதான். ராஜாஜியால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். பசியோடு இருப்பவன் எப்படிப் படிப்பான் என்று மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1920களிலேயே நீதிக்கட்சி இத்திட்டத்தை கொண்டுவந்திருந்தாலும், இதை விரிவுபடுத்தினார் காமராஜர்.
முதல் ஐந்தாண்டு ஆட்சியில், 4,267 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்றிருந்த நிலையை மாற்றி, பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் கல்வி கற்க, தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இதனால் தமிழ்நாட்டில் பள்ளியில் சேர்வோர் எண்ணிக்கை அதிகமானது. இதை அடுத்து அவரின் பிறந்தநாள் தமிழக அரசால், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.