AI, கூகுள்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அறிவுரை, மாணவர்களுக்கு முக்கிய செய்தி!
எதுவாய் இருந்தாலும் கூகுளிடம் கேட்கலாம். ஏஐயிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக் கூடாது.

எதற்கெடுத்தாலும் ஏஐ, கூகுள் என தொழில்நுட்பத்தை நம்பி, அதனிடத்தில் கேள்வி கேட்காதீர்கள் என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (20.09.2025) சனிக்கிழமை காலை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டார். மேலும், ரூ.277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, விழாப் பேருரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
’’எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கிற தலைமுறையாய் நம் மாணவர்கள் மாறிவிடக் கூடாது. எதுவாய் இருந்தாலும் கூகுளிடம் கேட்கலாம். ஏஐயிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக் கூடாது.
தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்த வேண்டும். மாணவர்களுக்கு அறத்தின் வலிமையையும் நேர்மையின் தேவையையும் ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உணர்த்த வேண்டும்.
பாடம் தாண்டி பல...
மாணவர்களுக்கு பாடம் தாண்டி, இலக்கியம், பொது அறிவுத் தகவல், சமூக ஒழுக்கம், சூழல் விழிப்புணர்வு, காலநிலை மாற்றம் குறித்த தெளிவு, மாற்று எரிசக்திகளின் தேவை ஆகியவற்றை புரிய வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு போர் அடிக்காத வகையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுடன் தோழமையுடன் பழக வேண்டும்.
பகுத்தறிவு மிக்க தலைமுறையாக
எதற்கு, எப்படி என்று கேட்கிற பகுத்தறிவு மிக்க தலைமுறையாக மாணவர்களை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு எந்த அளவு அறிவாற்றல் உள்ளதோ உடல் நலமும் அந்த அளவுக்கு முக்கியம். அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமையின் அடையாளமாக உயர்ந்துள்ளனர்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.






















