Students Admission: தமிழக அரசு அதிரடி.. கல்லூரி செல்லாத 777 அரசுப்பள்ளி மாணவர்கள்.. சேர்க்கையை உறுதிசெய்து உதவித்தொகை வழங்க உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:
’’2021-22ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத 777 மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நிறைவடைந்ததாலும், குடும்ப நிதி நிலை காரணமாகவும், விருப்பிய பாடப்பிரிவு கிடைக்காமை என பல்வேறு காரணங்களினால் கல்லூரிகளில் சேராத நிலை உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர் கல்வித் துறையினரால் 18.11.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்தி உயர்கல்வி தொடராத 777 மாணவர்களை பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
உதவி மையங்கள் அமைத்தல்
15.11.2022 முதல் 18.11.2022 வரை அனைத்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உதவி மையம் இதற்கென செயல்படுதல் வேண்டும். அம்மையத்தில் உயர்கல்வி துறை சார்ந்த அலுவலர்-1, உயர்கல்வி ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பயிற்சி பெற்ற முதன்மை கருத்தாளர்கள் டயட் விரிவுரையாளர்கள்)- 2 பேர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-1, 777 மாணவர்கள் சார்ந்த ஒன்றியங்களை சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் (ஓர் ஒன்றியத்திற்கு தலா-1) கண்டிப்பாக இடம் பெறுதல் வேண்டும்.
முதலில் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறவுள்ள விவரத்தினை தொலைபேசி வாயிலாக தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர செய்தல் வேண்டும்.
உதவி மையத்தில் அனைத்துக் கல்லூரிகளின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் கண்டிப்பாக பராமரித்தல் வேண்டும்.
உதவி மையத்திற்கு வரும் மாணவரிடம், அவர் எதிர்பார்க்கும் கல்லூரியின் பெயர், பட்டபடிப்பு குறித்து கேட்டறிய வேண்டும். பின் அக்கல்லூரிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அப்பட்டய படிப்பிற்கான காலியிடம் உள்ளதா என்பதனை கேட்டறிய வேண்டும். அவ்வாறு காலியிடம் இருப்பின் சார்ந்த உயர் கல்வி மண்டல இணை இயக்குநர்களிடம் தெரிவித்து அம்மாணவர்களுக்கு அப்பாட பிரிவினை மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீடு செய்ய செய்தல் வேண்டும். பின் அம்மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி, கல்லூரியில் சேர செய்தல் வேண்டும். அம்மாணவர்கள் தங்கள் சொந்த நிதியில் கல்விக் கட்டணம் செலுத்தும் பட்சத்தில் தாமாகவே கல்லூரியில் சேரலாம்.
நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றபின் 2 வார கால அவகாசத்திற்குள் கல்விக் கட்டணம் கட்ட, மாவட்ட ஆட்சியர் உதவியுடன் ஸ்பான்சர்ஷிப் பெற்றுத் தரப்பட வேண்டும்.
அவ்வாறு சேர்ந்தபின் அம்மாணவரது விவரங்கள் கூகுள் ஷீட்டில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். இம்மாணவர்கள் ரூ.5/- மட்டும் சேர்க்கை உறுதி கட்டணம் செலுத்தி தனது கல்லூரி சேர்க்கையினை உறுதிபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும், ஸ்பான்சர்ஷிப் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியருக்கு ஒவ்வொரு நாளும் தெரியபடுத்திடல் வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர், மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கல்லூரிகளில் செலுத்திடல் வேண்டும்.
அவ்வாறு விரும்பிய பாடப்பிரிவு காலியிடம் இல்லாத பட்சத்தில், முதன்மைக் கருத்தாளர்கள் மாணவருக்கு தக்க ஆலோசனை வழங்கி பிற பாடப் பிரிவில் சேர முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
மாணவர்கள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவர்களை தொடர்புகொண்டு மேற்காண் முறையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவரை அனுப்புதல் வேண்டும்.
ஏதேனும் மாணவர் தம் பெற்றோருடனோ/ பள்ளி ஆசிரியருடனோ/ ஆசிரியர் பயிற்றுனருடனோ சென்று கல்லூரியில் சேர விரும்பும் பட்சத்தில் அவ்வாறு செல்ல அனுமதிக்கலாம். பின்னர் அம்மாணவர் விவரங்களை Google Sheet-ல் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
உயர்கல்வி மண்டல இணை இயக்குநர்களுடனும் உயர்கல்வி துணை இயக்குநர்களுடனும் ஒருங்கிணைந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
மாணவர்களை தொடர்பு கொள்ளுதல்
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 18.11.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ள விவரம் 777 மாணவர்களுக்கும் மாநில திட்ட இயக்ககத்தில் இருந்து குரல் குறுஞ்செய்தி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் தொலைபேசி எண்களை இணைத்து வாட்ஸ் அப் குழு தொடங்கி உரிய தகவல்கள் தெரிவித்தும், தொடர் கண்காணிப்பு செய்தும் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பயனடையச் செய்யலாம்.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 777 மாணவர்கள் மற்றும் உதவி மையத்திற்கு வரும் பிற மாணவர்களையும் கல்லூரிகளில் சிறப்பான முறையில் சேர்க்க வழி வகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் விருப்பம், சூழல் மற்றும் கல்லூரிகளில் பாடப்பிரிவிலுள்ள காலியிடங்களுக்கு தக்கவாறு குறிப்பிட்டுள்ள துறைகள் துணையுடன் மாணவர்கள் உயர் கல்வியினை தெரிவு செய்து உயர்கல்வி தொடர்ந்திட ஆவண செய்தல் வேண்டும்’’.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.