700 கி.மீ. மிதிவண்டி பயணம்: சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி லயோலா கல்லூரி நெகிழ்ச்சி!
இத்தகைய முயற்சியில் பங்கேற்ற பத்து பேர் தங்கள் மிதிவண்டியில் 700 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்தனர்.

700 கி.மீ. மிதிவண்டி பயணம் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த பசுமை முயற்சியாக பசுமைப் பயண மிதிவண்டிப் பேரணியை லயோலா கல்லூரி தொடங்கி வைத்துள்ளது.
தமிழ்நாடு கான்பரன்ஸ் ஆஃப் ரிலீஜியஸ் இந்தியா (TNCRI) மற்றும் தமிழ்நாடு ஆல் இந்தியா கத்தோலிக யூனிவர்சிட்டி ஃபெடரேஷன் (TNAICUF) மற்றும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள், இலயோலா கல்லூரியுடன் இணைந்து 'பசுமை பயணம்' (அனைவருக்கும் பொதுவான இயற்கையைக் காக்கும் முயற்சி) என்ற மிதிவண்டிப் பேரணியை தொடங்கி வைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதே இப்பேரணியின் நோக்கமாகும்.
கன்னியாகுமரி டூ சென்னை
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் முடிந்தது. இத்தகைய முயற்சியில் பங்கேற்ற பத்து பேர் தங்கள் மிதிவண்டியில் 700 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்தனர். காலநிலை மாற்றம், மரம் நடுதல் உள்ளிட்ட விஷயங்களுடன் தூய்மையான சுகாதாரமான வாழ்க்கை குறித்தும் பள்ளிகள் மற்றும் சமூக மக்களுக்குச புரியும் வகையில் அவர்கள் பயணம் அமைந்தது.
பூமி ஒரு வரம், அதனை பாதுகாத்து இயற்கையுடன் இயைந்து வாழ்வது நமது பொறுப்பு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்வு நடை பெற்றது. இதற்கு இலயோலா கல்லூரி துணை நின்றது. மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் அமைப்பாளர்கள் என அனைவரும் இணைந்து இச் செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல உறுதி எடுத்ததுடன், இந்த உயர்ந்த பணியை மேற்கொண்டு மிதிவண்டி பேரணியில் கலந்து கொண்டவர்களை கௌரவித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
மிதிவண்டி பேரணியாளர்கள் இலயோலா கல்லூரி வளாகத்தில் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பிரார்த்தனைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.






















