அனைத்து வகையான கல்லூரிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்; முழுமையான பாடங்கள்: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் கல்லூரிகளில் முழு பாடங்கள் நடத்தப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் கல்லூரிகளில் முழு பாடங்கள் நடத்தப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.
பள்ளிகளைப் போல், கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்துப் பாடங்களும் முழுமையாக நடத்தப்படும்''.
இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்றும், 10% இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களுக்குத் தமிழக அரசுதான் நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், காமராசர் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு மட்டும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதாக அறிவித்தது. இதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விளக்கம்
எனினும் இதற்கு விளக்கம் அளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தில் இரு வகையான முது அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகள் நடத்தப்படுவதாகவும், மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 20 இடங்கள் கொண்ட படிப்புக்கு மாநில அரசின் இட ஒதுக்கீடும், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 30 இடங்கள் கொண்ட படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ’’அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்’’ என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்