Anbumani: நிரப்பப்படாத 6 மருத்துவ இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்க- அன்புமணி வலியுறுத்தல்
விலை மதிப்பற்ற 6 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் வீணடிக்கப்பட்டதால், அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
விலை மதிப்பற்ற 6 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் வீணடிக்கப்பட்டதால், அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பபடவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், அரசு மருத்துவக் கல்லூரிகள் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும்.
இந்த இடங்களை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு, ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நிரப்பும். இரு கட்டக் கலந்தாய்வுகளில் நிரப்பப்பட்டவை தவிர மீதமுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும்.
புதிய விதியால் காலி இடங்கள்
2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கலந்தாய்வு முறையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றம் செய்துள்ளது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகளுக்கு பதிலாக கூடுதலாக இரு கலந்தாய்வுகளைச் சேர்த்து மொத்தம் 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, இரு கட்ட கலந்தாய்வுகளுக்குப் பிறகு மீதமுள்ள இடங்கள் மாநிலங்களுக்கு மீண்டும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அவை யாருக்கும் பயன்படாது; அவை காலியாகவே இருக்கும்.
மத்திய அரசின் இந்த புதிய விதிதான் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்திருக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்திலிருந்து 825-க்கும் கூடுதலான இடங்கள் வழங்கப்பட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 4 கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்து விட்ட நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா ஓர் இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் தமிழகத்திற்கு திரும்ப ஒப்படைக்க்கப்படாது என்பதால் அவற்றை பயன்படுத்த முடியாது.
சிறப்புக் கலந்தாய்வு
2021-22ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அந்த இடங்களை நிரப்ப வேண்டும்; இல்லாவிட்டால் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதைத் தொடர்ந்து ஐந்தாவது சுற்று சிறப்புக் கலந்தாய்வு நடத்தி 24 இடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் அத்தகைய சிறப்புக் கலந்தாய்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அவை வீணாகிவிடும்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசுப் பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் நிரம்பவில்லை என்றால், அவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைக்கப்பட்டு, நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமற்றது. இத்தகைய அநீதிகள் களையப்படும் வரை தமிழகத்திற்கு பாதிப்புகள் தொடரும்.
நிரந்தரத் தீர்வு என்ன?
இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வதுதான். 1980-களின் தொடக்கத்தில் அகில இந்திய ஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது பல மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் பயில்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன்தான் அகில இந்திய ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தேவை இல்லை.
எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.