உதவித்தொகை, இலவச விடுதியுடன் 5 ஆண்டு ஒருங்கிணைந்த தமிழ் பட்டப் படிப்பு; சேர்வது எப்படி?
2025-26ஆம் கல்வியாண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்பு) (Five Years Integrated P.G. M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பு சேர்க்கை
தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (எம்.ஏ. தமிழ்) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate MA. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது 2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/ தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை https://ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மாதாமாதம் ரூ.2000 கல்வி உதவித்தொகை
இந்தக் கல்வியாண்டு முதல் இந்த வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் தமிழ்நாடு அரசால் ரூ.2000/- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது. விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜூன் 16 கடைசித் தேதி
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) அஞ்சலில் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்டறாப்பம் இடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் சமர்ப்பித்திட வேண்டும். இதற்கு 16.06.2025 - திங்கள் கிழமை கடைசித் தேதி ஆகும்.
மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://ulakaththamizh.in/
தொலைபேசி எண்: 22542992 / 22542781
இ- மெயில் முகவரி: iits@tn.nic.in






















