PM- YUVA Mentorship Scheme: பிரதமர்-இளைய எழுத்தாளர் திட்டத்தில் 3 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு
தேர்வு செய்யப்பட்டுள்ள 75 எழுத்தாளர்களில், 38 பேர் ஆண்கள், 37பேர் பெண்கள்.இரண்டு பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள்
PM- YUVA Mentorship Scheme: பிரதமர் - இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 75 எழுத்தாளர்களை தேசிய புத்தக அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதில், மூன்று தமிழ் மொழி எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை , விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ், ‘ இந்திய தேசிய இயக்கம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற அகில இந்திய போட்டியின் முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. உதவித்தொகையுடன் கூடிய இந்த வழிகாட்டுதல் திட்டத்தின்படி, 30 வயதுக்கு குறைந்த 75 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய போட்டி கடந்த ஜூன் 1-ம்தேதி முதல் ஜூலை 31 முடிய 'மைகவ்' இணைய தளத்தின் மூலம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களிடமிருந்தும், வெளி நாட்டு இந்தியர்களிடம் இருந்தும், 22 அலுவல் மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த நிபுணர்கள் போட்டிக்கு வந்த நூல்களை ஆய்வு செய்தனர்.
NBT, India, announces results of All-India Contest organized on the Theme ‘National Movement of India’ under PM-YUVA Mentorship Scheme. Congratulations to all the 75 winners!#AzadiKaAmritMahotsav@PMOIndia @EduMinOfIndia @mygovindia @dpradhanbjp @Drsubhassarkar @malik_yuvraj pic.twitter.com/90CRdROKmS
— National Book Trust, India (@nbt_india) December 25, 2021
2021 ஜனவரி 31-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில், ‘’ நமது விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களுடன் தொடர்புள்ள நிகழ்வுகள், விடுதலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற தீரச்செயல்கள் பற்றி எழுதுமாறு நமது இளம் நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
அதன்படி , மத்திய கல்வி அமைச்சகம் , இந்தத் திட்டத்தைத் தொடங்கியது.
தேர்வு செய்யப்பட்டுள்ள 75 எழுத்தாளர்களில், 38 பேர் ஆண்கள், 37பேர் பெண்கள்.
இரண்டு பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். 16 எழுத்தாளர்கள் 15-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 21-25 வரம்பில் 32 பேரும், 26-30 வயது வரம்பில் 25 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர.
தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் ஆறு மாத கால வழிகாட்டுதல் பயிற்சி பெறுவார்கள். தேசியப் புத்தக அறக்கட்டளை மூலம் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மற்றும் பிரதித் திருத்த ஆதரவு வழங்கப்படும். எழுத்தாளர்களின் நூல்கள் பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் மாதம்தோறும் ரூ.50,000 வீதம் ஆறு மாதங்களுக்கு உதவித்தொகை பெறுவார்கள். மேலும் சிறந்த, வெற்றிகரமான பிரசுரங்களுக்கு 10 சதவீத ராயல்டி தொகையும் வழங்கப்படும்.
தமிழில் நூல்களை எழுதிய ஜே.யு.சுகானா, ஜி.சரவணன், கே.கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்