பள்ளிக் கல்வியில் புரட்சி! பாடத்திட்டக் குழுவில் விளையாட்டு வீரர் அஸ்வின், இஸ்ரோ தலைவர்!- முழு லிஸ்ட்
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க, பல்வேறு நிபுணர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையிலும், கல்வியில் சமூக சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கிலும், தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு. மொழி மற்றும் சமூக மரபினை உள்ளடக்கிய கலைத்திட்டம் உருவாக்குவது இன்றியமையாதது.
மாநிலக் கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூகநீதி மற்றும் உள்ளடங்கிய கல்வி ஆகியவற்றின் அடிப்படையில், அனைத்து மாணவர்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற திறன்களான கூர்சிந்தனை, படைப்பாற்றல், எண்மக் கல்வியறிவு, நிதிசார் அறிவு, காலநிலைக் கல்வி, உடல்நலம் மற்றும் பாதுகாப்புசார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் கலைத்திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படுவதை தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 வலியுறுத்துகிறது.
எதற்காக இவை?
இக்கல்விக் கொள்கையின் அடிப்படையில், எதிர்காலச் சமூகம், பயனுறும் வகையில் மாணவர்களை மனித வளங்களாக உருவாக்கிட தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான கலைத்திட்ட வடிவமைப்பு- 2025 மற்றும் அதனடிப்படையில் மாணவர்களின் வயதிற்கேற்ற பாடத்திட்டம், பாடப்பொருள் உருவாக்கம், கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குவது ஆகியவை அவசியமாகின்றன.
தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்புக் குழு அமைப்பு
இதன் தலைவராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் நியமிக்கப்பட்டு உள்ளார். உறுப்பினர்களாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தொல்லியல் நிபுணரும் பேராசிரியருமான க.ராஜன், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தீலிப், ஓவியர் மணியம் செல்வன், பல்வேறு பேராசிரியர்கள் உட்பட 13 வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உயர்மட்டக் குழுவும் அமைப்பு
இவர்கள் அனைவரும் இணைந்து வடிவமைக்கும் பாடத்திட்டத்தை உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இக்குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருப்பார். துணைத் தலைவராக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இருப்பார்.
உறுப்பினர்களாக இஸ்ரோ தலைவர் நாராயணன், கல்வியாளர் மாடசாமி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர் தேவநேயன் உள்ளிட்ட 13 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















