10th Result 2023 Puducherry: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு - புதுச்சேரி மாநில தேர்ச்சி விவரம் இதோ
புதுச்சேரி-காரைக்காலில் 89.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 3.8 சதவீதம் குறைவு அரசு பள்ளிகளில் 6.09 சதவீதம் குறைவு
புதுச்சேரி: புதுச்சேரி-காரைக்காலில் 89.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 3.8 சதவீதம் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் 6.09 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் முதல்வர் ரங்கசாமி சட்டமன்றத்தில் தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி- காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி- காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது என்றார். புதுச்சேரி-காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி- காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுச்சேரியில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன என்றார்.
புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார். கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக பள்ளிகள் இயங்கவில்லை. அதோடு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியும் அளிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிவிகிதம் குறைந்துள்ளது. இருப்பினும் 100 சதவீத தேர்ச்சியை நோக்கியே அரசு செல்கிறது. தனியார் பள்ளிகளோடு அரசு பள்ளிகளை ஒப்பிடக்கூடாது.
தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறையில் நாம் முதலிடம் வகித்து வருகிறோம். அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ தரத்துக்கு உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். பேட்டியின் போது உடனிருந்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஆனாலும் புதுச்சேரி அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலம், தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும். அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளாக அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளோம்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
Puducherry 10th Result 2023: மாணவ, மாணவியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு காணலாம்.
அதேசமயம் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்