crime: முன்விரோதத்தில் வெறிச்செயல்... வாலிபரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் பைக்கில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்பாஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின். இவரது மகன் பிரின்ஸ் லாரா என்கிற சின்னா (28). பெயிண்டர். இவருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரின்ஸ்லாரா திருக்கானூர்பட்டி மெயின் ரோட்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து பிரின்ஸ் லாரா கத்தியுள்ளார். இதனால் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிரின்ஸ் லாராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரின்ஸ் லாரா இறந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தஞ்சை அருகே கங்கா நகர் பகுதியில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் திருக்கானூர்பட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வீடுகளில் சோதனை:
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் 3 வீடுகளில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் கொள்ளுப்பேட்டைத் தெரு, ஆடக்காரத் தெரு, சையத் அலி பாஷா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் காவல் ஆய்வாளர்கள் வி. சந்திரா (மேற்கு), கருணாகரன் (கிழக்கு), ரமேஷ் (தெற்கு) ஆகியோர் சோதனை நடத்தினர். மேலும், 3 வீடுகளிலும் இருந்த செல்பேசிகளை வாங்கி சோதனையிட்டனர்.
தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்ட 3 பேர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ.) சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் இந்த வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் இல்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.