Crime: மாமியார் தற்கொலை.. 4 வயது மகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பதற்றம்.. என்ன நடந்தது?
முன்னதாக இப்பெண்ணின் மாமியார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவின் எச்ஏஎல் பகுதியில் உள்ள குடியிருப்பில் தன் நான்கு வயது மகளைக் கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இப்பெண்ணின் மாமியார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று (ஆக.22) அதிகாலை 4.30 மணியளவில் பக்கத்து அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து, அவரது கணவர் கதவைத் தட்டியநிலையில், மனைவி காயத்ரியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து திறந்தபோது காயத்ரியையும், மகள் சம்யுக்தாவையும் கண்டு அதிர்ச்சியடைந்த நரேந்திரன் அவசர அவசரமாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சம்யுக்தா உயிரிழந்ததாக அறிவித்தனர்.
காயத்ரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் குணமடைந்தவுடன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து அவரது மனநலம் குறித்து உளவியல் நிபுணருடன் ஆலோசிக்க உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணிபுரியும் நரேந்திரன், தனது தந்தையை சந்தித்துவிட்டு முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து திரும்பியதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்பு தனது தாயார் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நரேந்திரன் தனது தந்தையை அடிக்கடி பார்த்து வந்ததாகவும், இதற்கும் தற்கொலை முயற்சிக்கும் சம்பந்தம் உள்ளதா என தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதே போல் பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தனது நான்கு வயது மகளை தூக்கி எறிந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றன.
பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!