ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரை பணத்திற்காக மருத்துவமனை ஊழியரே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் தங்கி தனியார் கல்லூரி துணை பேராசிரியராக பணியாற்றி வரும் மவுலி என்பவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி சுமிதாவை கடந்த மே மாதம் 21-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். டவர் மூன்றாவது மாடியில் படுக்கை எண் 363-இல் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சுமிதாவிற்கு மே 22ஆம் தேதி இரவு, மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்ற கணவர் மவுலி, மறுநாள் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது சிகிச்சை வார்டி மனைவி சுமிதா இல்லாதது தெரியவந்தது.
மனைவி சுமிதா காணாமல்போனது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கணவர் மவுலி கேட்டிருந்த நிலையில், பின்னர் மவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஒருவாரம் கழித்தும் மனைவியை பற்றிய தகவல் ஏதும் தெரியாததால் கடந்த மே 31-ஆம் தேதி பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள 8-ஆவது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது தெரியவந்தது. மவுலியின் புகாரை கொண்டு அவரை சவக்கிடங்கிற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், மவுலியிடம் பிணத்தை காட்டியுள்ளனர். அந்த உடல் தனது மனைவி சுமிதா உடையதுதான் என அடையாளம் மவுலி அடையாளம் காட்டினார்.
மூன்றாவது மாடியில் கொரோனா சிகிச்சையில் இருந்த சுமிதா எப்படி எட்டாவது மாடிக்கு சென்றார்? அங்கு அவர் எப்படி மரணமடைந்தார் என்ற கேள்வி காவல்துறையினர் மத்தியில் எழுந்த நிலையில் மருத்துவமனையின் சிசிடிவி கேமிரா காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த ஜூன் 9-ஆம் தேதி சுமிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கொரோனா நோயின் தாக்கத்தால் அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்ததால் அவரது உடல் கணவரிடம் சட்டப்படி ஒப்படைக்கப்பட்டது, இந்த மரணம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் சுமிதா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் ரதிதேவி பணம் மற்றும் செல்ஃபோனுக்காக சுமிதாவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததால் அவரை கைது செய்துள்ளனர். பணம் மற்றும் செல்ஃபோனுக்காக சுமிதாவை கொலை செய்து அவரது உடலை 8-ஆவது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் வைத்ததாகவும் பின்னர் அகற்றிவிடலாம் என்று நினைத்து முடியாமல் போனதாகவும் பிணம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அனைவருக்கும் தெரிந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரதிதேவி கூறியதாக தெரியவந்துள்ளது.