Watch Video: டாஸ்மாக் பாரில் அரிவாளால் சரமாரியாக தாக்கும் இளைஞர்; அதிர்ச்சி வீடியோ..!
வெட்டுப்பட்ட இருவரும் ஆத்திரத்தில் தரையில் கிடந்த கல்லை எடுத்து கிருஷ்ணகுமார் மீது எறிந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ் (27). இவர் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அதே செட்டிகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித், பீட்டர், ரஞ்சித் பிரபாகரன், லிங்கேஷ் ராஜா ஆகிய நான்கு பேர் அங்கு சென்று மாரிராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை வெட்டியுள்ளார். உடனே அங்கிருந்த மாயாண்டி என்பவர் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் கிருஷ்ணகுமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் கை, மார்பு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வெட்டுப்பட்ட இருவரும் ஆத்திரத்தில் தரையில் கிடந்த கல்லை எடுத்து கிருஷ்ணகுமார் மீது எறிந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்து அங்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அரிவாளால் வெட்டுப்பட்ட மாரிராஜ், மாயாண்டி மற்றும் கல் எறிபட்டு காயமடைந்த கிருஷ்ணகுமார் ஆகிய மூன்று பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் செட்டிகுளத்தைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கும், செல்வராஜ் என்பவருக்கும் இடையே இருந்து வரும் முன்பகை காரணமாக செல்வராஜ் தரப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று ராஜ் தரப்பை சேர்ந்த மாரிராஜை வெட்டியது தெரிய வந்துள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள டாஸ்மாக் பாருக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிய இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சியால் நெல்லையில் பரபரப்பு.. @abpnadu @SRajaJourno pic.twitter.com/QZgNOLDLZw
— Revathi (@RevathiM92) October 27, 2022
மேலும் கிருஷ்ணகுமார் மீது தாலுகா காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கிருஷ்ணகுமார், மாரிராஜை தகராறில் இழுக்கிறார். பின்னர் தான் கொண்டு வந்த பையில் இருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை மீது ஓங்கி வெட்டியதும் அவர் அலறி அடித்து கொண்டு ஓடுகிறார். தொடர்ந்து வெறி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் அரிவாளை ஓங்கியபடி கிருஷ்ணகுமாரை நோக்கி வரும்போது அவர் அங்கிருந்து பிளாஸ்டிக் டேபிளை வைத்து தன்னை தற்காத்து கொள்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் தடுக்க வந்த மாயாண்டியை வெட்டுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சியால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்