திரும்பும் திசையெல்லாம் கொள்ளை... ஆட்டம் காட்டிய கொள்ளையன்; ஸ்கெட்ச் போட்டு தட்டி தூக்கிய போலீஸ்
விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலே கொள்ளையர்கள் கைது,

விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலே கொள்ளையர்களை கைது செய்து பிரம்மதேசம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேச காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாலம் கூட்டு சாலையில் பிரம்மதேசம் காவல் நிலைய உதவிஆய்வாளர் சுதன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீபதி மற்றும் தலைமை காவலர்கள் சிவசக்தி மைந்தன், வெற்றிவேல் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டிவனம் மார்க்கத்திலிருந்து மரக்காணம் நோக்கி அதி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது இருசக்கர வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கையில் வைத்திருந்த இரும்பு ராடை வைத்து மிரட்டி உள்ளனர்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவலர்கள் இருவரையும் பிடித்து அவர்களிடம் இருந்த பேக்கை சோதனை செய்தபோது பேக்கில் கை குளோஸ், இரும்பு ராடு, முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் சிவகங்கை மாவட்டம் கனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அழகர்சாமி வயது 35 என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மலைராஜன் என்பவரது மகன் செல்வகுமார் வயது 25 என்பதும், இவர்கள் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானூர் கிராமத்தில் ஆழ்வார் என்பவரது வீட்டில் கடந்த 23.05.2025 அன்று இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் பிரம்மதேசம் மட்டுமல்லாமல் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், இதில் அழகர்சாமி என்பவர் மீது சிவகங்கை, மதுரை, சென்னை, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் புதுச்சேரியில் உள்ள பிரபல சாராய வியாபாரி பன்னீர்செல்வம் என்பவரிடம் அடைக்கலம் இருந்து கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் இவர்களுக்கு சிவகங்கை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் மூளையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது, அழகர்சாமி அளித்த தகவலின் பெயரில் புதுச்சேரியில் இருந்த பன்னீர்செல்வத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் இந்த தொடர் கொள்ளைகளுக்கு மூளையாக செயல்பட்ட சிவகங்கை ரவுடியையும் பிரம்மதேசம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகை 3 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் பித்தளை பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கூட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் திண்டிவனம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நேரில் விசாரணை மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பார்வையிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் குற்றவாளி குறித்து தகவல்களை அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார், மேலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பிரம்மதேசம் போலீசாரையும் பாராட்டினார்.





















