விழுப்புரம் அருகே பயங்கரம்... திருமணம் செய்ய கல்லூரி மாணவி மறுப்பு..கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற வாலிபர்
விழுப்புரம் அருகே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபர்
விழுப்புரம் அருகே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெற்றிச்செல்வன். இவர் வேலை எதுவும் செய்யாமல் அதே பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவியை ஒரு தலை காதல் செய்து வந்துள்ளார். மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் பொழுதும் காதல் தொல்லை அளித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தனது பெற்றோரான வேலு மற்றும் பூங்கோதையுடன் பெண்ணின் வீட்டிற்கு தான் நேரில் சென்று பெண் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி மாணவியின் பெற்றோர் தனது மகள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மிகச் சிறிய வயது உடைய அவளை வயது அதிகமாக உள்ள வெற்றி செல்வனுக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர்.
இதில் ஆத்திரமுற்ற வெற்றிச்செல்வன், நேற்று மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவி தனியாக இருக்கும் பொழுது வீட்டின் உள்ளே புகுந்து அவரை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்த மாணவியை கண்ட அவர் உயிரிழந்ததாக எண்ணி அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை தொடர்ந்து 100 நாள் வேலைக்குச் சென்று இருந்த மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாணவியின் கழுத்து இறுக்கப்பட்டு வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விழுப்புரத்தில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடி தலை மறைவாக உள்ள வெற்றி செல்வனை விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.