செம்மரக்கடத்தலில் ஆந்திர காவலரை கொன்ற கும்பல்; 2வது நபர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
அதிரடிப்படை காவலர்கள் விரட்டி சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அதில் இருந்த 7 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது காரை ஏற்றி கொலை செய்த கடத்தல் கும்பலின் முக்கிய நபர் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
செம்மரக்கடத்தல்
ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஆந்திர அரசு, சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. இந்த படை காவலர்கள் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அதிரடிப் படையை சேர்ந்த காவலர்கள் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், கேவி பல்லி மண்டலம், குன்றேவாரி பல்லி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வேகமாக வந்த காரை காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
காவலர் உயிரிழப்பு
அந்த கார், காவலர் கணேஷ் (32) மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த காவலர் கணேஷை, பீலேரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அதிரடிப்படை காவலர்கள் விரட்டி சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அதில் இருந்த 7 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
இரண்டாவது நபர் நீதிமன்றத்தில் சரண்
இதில் தலைமறைவாக உள்ள ஆறு பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில காவல்துறையினர் தேடி வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான ராமன் கடந்த 14 தேதி விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக சரணடைந்தையடுத்து அவருக்கு 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியான மகேந்திரன் விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக சரணடைந்தையடுத்து அவருக்கு 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.