பேருந்தை நிறுத்தாத பஸ் கண்டக்டரை தாக்கிய தேமுதிக பிரமுகர் கைது - செஞ்சியில் பரபரப்பு...!
அரசு பேருந்து கண்டாக்டரை தாக்கிய தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 52). இவர் விழுப்புரத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்து பாலப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என்ற போதிலும் பேருந்தை நிறுத்தும்படி கண்டக்டர் கொளஞ்சி (52) என்பவரிடம் கோவிந்தன் கூறினார். ஆனால் பேருந்து நிற்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் ஒன்று திரண்டு பேருந்தை வழிமறித்ததோடு கண்டக்டர் கொளஞ்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் தயாநிதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த செஞ்சி போலீசார் தயாநிதியை கைது செய்தனர்.
சாலை மறியல்: இதை அறிந்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சண்முகம், தே.மு.தி.க. ஒன்றிய முன்னாள் செயலாளர் விஜயராகவன் மற்றும் பாலப்பட்டு கிராம மக்கள் நேற்று மதியம் செஞ்சி போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது தயாநிதியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும். கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைத்தனர்.
அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் செஞ்சி காவல் ஆய்வாளர் தங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து அரசு பேருந்து கண்டக்டர் கொளஞ்சி அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொளஞ்சியை தாக்கியதாக விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் தயாநிதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்