லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புங்க... நம்பி ஏமாந்த இளம்பெண்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4¾ லட்சம் மோசடி. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4¾ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புகைப்படத்தை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அம்புழுக்கை கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 27). இவர் வானூர் பகுதியில் உள்ள ஒரு கிரஷர் கம்பெனியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பகுதிநேர வேலை என்று வந்த லிங்கை தொட்டதும் ஒரு வாட்ஸ்-அப் எண்ணுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து கவிதாவை தொடர்புகொண்ட நபர், பகுதிநேர வேலையாக ஷேர்சாட்டில் இருந்து, தான் அனுப்பும் புகைப்படத்தை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்றார்.
ரூ.4¾ லட்சம் மோசடி
இதையடுத்து அந்த நபர் கூறியவாறு செய்து கவிதா ரூ.4,800-ஐ பெற்றுள்ளார். பின்னர் மர்ம நபர், கவிதாவை டெலிகிராம் ஐடியில் இருந்து தொடர்புகொண்டு ஒரு லிங்கை அனுப்பி வைத்து சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றார். இதை உண்மையென நம்பிய கவிதா, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனது நண்பர்களின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 10 தவணைகளாக ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 470-ஐ அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். பணத்தைப்பெற்ற அந்த நபர், கவிதாவுக்கு சேர வேண்டிய தொகையை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து கவிதா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.