"வேலைக்கு போக மாட்டியா?" என கேட்ட தந்தை; கோவத்தில் மகன் செய்த கொடூரம் - செஞ்சியில் பயங்கரம்
வெட்டியாக சுற்றி திரிந்த மகனை கண்டித்த தந்தையை கத்தியால் தலையில் வெட்டி கொன்ற மகன் கைது.

விழுப்புரம்: செஞ்சி அருகே வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வெட்டியாக சுற்றி திரிந்த மகனை கண்டித்த தந்தையை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்து தலைமறைவான மகனை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.
தந்தையை கொலை செய்த மகன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர்கள் அப்பாதுரை (68) நீலாவதி (65) தம்பதிகள். இவர்களுக்கு நாவத்தாள் (33) என்ற மகளும், நாகராஜ் என்ற மகனும் உள்ள நிலையில், மகள் நாகாத்தாள்-க்கு திருமணம் ஆன நிலையில், மகன் நாகராஜ் வேலைக்கு செல்லாமல் வெட்டியாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இதனால் தந்தை அப்பாதுரை மகன் நாகராஜை அடிக்கடி கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதே போல் நேற்று இரவும் மது போதையில் இருந்த மகன் நாகராஜை தந்தை அப்பாதுரை வேலைக்கு செல்லாமல் இப்படி வெட்டியாக சுற்றி திரிந்து வருகிறாயே என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை அப்பாதுரையை தலையில் வெட்டி உள்ளார். இதில் பலத்த ரத்த காயம் அடைந்த அப்பாதுரை அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் நீண்ட நேரமாக அப்படியே கிடந்ததால் அவரது மனைவி நீலாவதி சென்று பார்த்த போது அப்பாதுரை இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மகன் நாகராஜ் அங்கிருந்து தலைமறைவானார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு விரைந்த செஞ்சி போலீசார் அப்பாதுரை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த மகன் நாகராஜை கைது செய்தனர்.
வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வெட்டியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மகனை கண்டித்த தந்தையை மகனே கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















