![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது
விழுப்புரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளத்தனமாக ரூ.19,000-க்கு விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது - 5 ரெம்டிசிவர் மருந்து குப்பிகள் பறிமுதல்.
![விழுப்புரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது Two persons have been arrested in Villupuram for trying to sell Remdesivir on the black market விழுப்புரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற இருவர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/06/ad25da92daaefc595257056e69475edc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் தெற்கு புறமாக உள்ள வாடகை கார் நிறுத்துமிடத்தில் சாலையோரமாக புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்று சந்தேகத்தின் பெயரில் நின்றுள்ளது. அது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு அது பற்றி சிலர் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் கல்பனா தலைமையில் அங்கு வந்த குற்றப்புலனாய்வுத்துறையினர், காரை சோதனை செய்தபோது காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த விபவதேவர் என்பவர் தான் ஒரு மருத்துவர் எனக் கூறியுள்ளார். மேலும் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் கிருஷ்ணா என்றபெயரில் மருத்துவமனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
அவருடன் அமர்ந்திருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவரின் மகன் முத்துராமன் என்பவரிடம் விசாரணை செய்த போது, அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இருவர் மீதும் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களின் வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அப்போது உள்ளே அரசு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து 5 குப்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த குற்றப்புலனாய்வு துறையினர், சம்மந்தப்பட்ட இருவரிடத்திலும் தங்கள் ‛பாணியில்’ விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்த மருந்தை, ஒரு ஊசி மருந்தை ரூபாய் 19 ஆயிரத்திற்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக தமிழகம் அளவில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்படுவதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் என்கிற நம்பிக்கையில் ரெம்டெசிவர் மருந்தை பலரும் உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
பல மாநிலங்களில் கூட அந்த மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கடந்த வாரம் நூற்றுக்கணக்கானோர் குவிந்து, காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கும் அளவிற்கு களவாடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் மருத்துவப்பணியாளர்களாக உள்ளனர்.
எனவே அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ள ரெம்டெசிவர் மருந்தின் நிலை என்ன என்பதை உடனே அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காத மருந்து, கள்ளச்சந்தையில் எவ்வாறு கிடைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உயிரை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் இது போன்ற பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)