ஓலாவில் வேலை.. ஆசை காட்டி நூதன மோடி! 22 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி
56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலியான பணி ஆணையை வழங்கி, பலரை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் தற்போது மாவட்டத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது.
நூதன மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோ (29) மற்றும் கிருஷ்ணகிரி காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதீஷ் (40) ஆகிய இருவரும் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று, OLA கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினர்.
போலியான பணி ஆணை வழங்கி மோசடி:
,இருவரின் ஆசை வார்த்தையை நம்பி 56 நபர்கள் பணம் செலுத்தி இருக்கின்றனர். பணம் பெற்ற பின்பு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் போலியாக OLA கம்பெனியின் பெயரில் பணி ஆணைகளை தயாரித்து வழங்கினர். அதை வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் அந்த 56 நபர்களும் OLA நிறுவனத்திற்கு நேரில் சென்றனர்.
காத்திருந்த அதிர்ச்சி:
அங்கு சென்றவர்கள், கம்பெனி நிர்வாகத்திடம் வேலை பற்றிக் கேட்டபோது, "இந்த பணி ஆணைகளை எங்கள் நிறுவனம் வழங்கவில்லை, இது போலியானது" என்று கூறியதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தனக்கு பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற இருவரை தொடர்புகொண்டு பேசினர்.
நைசாக பேசி பிடித்து ஒப்படைப்பு
பணத்தை இழந்தவர்கள் நைசமாக பேசி மனோவும் சதீஷையும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இருவரையும் பிடித்து, நேரடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்கள் மீது விரிவாக புகார் மனு அளித்தனர்.
காவல் துறை நடவடிக்கை
இந்த தகவல் கிடைத்த உடனே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பத்தூர் கந்திலி போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
விசாரணையின் போது, இந்த இருவரும் போலியான பணி ஆணை தயாரித்து, மொத்தம் 22 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், இருவரையும் காவலில் அடைக்க உத்தரவிட்டது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பரபரப்பு நிலை:
56 பேரிடம் OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஆணை வழங்கி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வேலை தேடி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை
இந்த சம்பவத்தையடுத்து, போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றும் கும்பல்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.






















