Crime: திருச்சி அருகே பயங்கரம்...தலையில் அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன் கைது
திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவில் மகன் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், மனைவி சுஜாதா, மகன் சுரேந்திரனுடன் வாழ்ந்து வந்தார். மகள் வரலட்சுமி அதே பகுதியில் திருமணம் முடித்து கணவருடன் வசித்து வருகிறார். புகழேந்தி குடிப்பழக்கமுள்ளவராக தெரிய வருகிறது. குடிப்பழக்கத்தினால் தினசரி வீட்டில் சண்டை சச்சரவு நடந்து வந்துள்ளதுடன், மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடனும் அவர் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது மகன் சுரேந்திரன் தந்தையை தட்டிக் கேட்டார். இதில் மகனுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. பின்னர் சுரேந்திரன் மன உளைச்சலால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னரும் மனைவியுடன் புகழேந்தி மீண்டும் சண்டை போட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புகழேந்தி வீட்டின் முன்புறமுள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். இதற்கிடையே நள்ளிரவில் வீடு திரும்பிய சுரேந்தர் , தாய் சுஜாதா அழுது கொண்டிருந்தது கண்டு மனம் வெதும்பி கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை குச்சியாலும், கத்தியாலும் தாக்கியதாக தெரிகிறது. இதை கண்டு மனைவி சுஜாதா மகனை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத சுரேந்திரன் பக்கத்தில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து புகழேந்தியின் தலையில் போட்டார். இதில் புகழேந்தி முகம் சிதைந்த நிலையில் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அவர் தப்பிச் சென்றார்.
இதனை தொடர்ந்து தகவலின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் சந்தியாகு, பாலமுருகன், இளங்கோ மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் புகழேந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்து தப்பியோடிய சுரேந்தரை (23) போலீசார் கைது செய்தனர். இவர் மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார். நள்ளிரவில் மகன் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள செய்தி காட்டுத்தீயாய் பரவியதால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்